மேகமலை புலிகள் காப்பக விவகாரம் - மலைக்கிராம மக்களை வெளியேற்ற எதிர்ப்பு!
தேனி, 07 செப்டம்பர் (ஹி.ச.) தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைக்கிராம மக்களை மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வருசநாடு முதல் கடமலை
மேகமலை


தேனி, 07 செப்டம்பர் (ஹி.ச.)

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைக்கிராம மக்களை மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வருசநாடு முதல் கடமலைக்குண்டு வரை 15 கிலோமீட்டர் தூரத்திற்கு மாபெரும் நடைபயணம் நடைபெற்றது.

மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு உட்பட்ட 98 மலைக்கிராமங்களில் வசிக்கும் சுமார் 4,600 குடும்பங்களை வன ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றக் கூடாது என்றும், 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த நடைபயணம் நடத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்புராயன் நடைபயணத்தை தொடங்கி வைத்தார். வருசநாட்டில் தொடங்கிய நடைபயணம் வைகை நகர், தர்மராஜபுரம், தங்கம்மாள்புரம், மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று கடமலைக்குண்டில் நிறைவடைந்தது.

இதில் பெண்கள் உள்பட ஏராளமான மலைக்கிராம மக்கள் பங்கேற்று, தங்களது வாழ்விட உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.

நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மோகன்குமார்,

தலைமுறை தலைமுறையாக மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூற முடியாது என்றார்.

மேலும், மலைக்கிராம மக்களை வெளியேற்றும் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனு மீது தங்களுக்கு முழுமையான நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக தங்கள் சார்பில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தலையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் மோகன்குமார் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam