Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத் தீர்வை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் இன்று வெளியிட்டார்.
பொதுமக்களுக்கு சேவையை எளிமையாக்கும் வகையிலும், துறையின் செயல்பாடுகளை நவீனப்படுத்தும் வகையிலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சட்டப்பேரவையில் பேசுகையில்,
வணிகவரித்துறையில் வரி செலுத்துவோர் எளிதில் தகவல்களை பெறும் வகையில், அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்த ஒரு சீர்மிகு, பயனர் நட்பு இணையதள வசதி உருவாக்கப்படும்.
மேலும் வரி நிர்வாகத்தை மேலும் திறம்பட கையாள தனி வரி விதிப்பு வட்டம் ஒன்று உருவாக்கப்படும். பொருளாதார குற்றங்களை கண்டறிந்து வரி ஏய்ப்பை தடுக்க புதிய பொருளாதார நுண்ணறிவு பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும்
பதிவுத்துறையில் பணியாளர்கள் நலன் கருதி முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சனிக்கிழமைகளில் கட்டாயமாக செயல்பட்டு வந்த 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இனி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும்.
இனி சார்பதிவாளர் அலுவலகங்கள் வார நாட்களில் மட்டுமே செயல்படும் என்றும், சனிக்கிழமை கட்டாயப் பணி முறை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஒரு வருவாய் கிராமம் பல சார்பதிவக எல்லைகளில் பிரிந்து கிடக்கும் குழப்பத்தை தவிர்க்க, ஒரு வருவாய் கிராமத்தை முழுமையாக ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் சொத்து பதிவு தொடர்பான குழப்பங்கள் நீங்கும்.
பணிச்சுமை மிகுந்த 25 சார்பதிவாளர் அலுவலகங்கள் கண்டறியப்பட்டு, அங்கு பொதுமக்களுக்கு விரைவான சேவை கிடைக்க கூடுதல் பணியாளர்கள் மற்றும் வளங்கள் வழங்கப்படும். அதேபோல் பொதுமக்களுக்கு மேம்பட்ட பதிவு சேவையை வழங்கும் வகையில், நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 25 மாதிரி பதிவு மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும்.
பதிவுத்துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் தரவு பகுப்பாய்வு மையம் நிறுவப்படும். இதன் மூலம் பத்திரப்பதிவு தரவுகள் துல்லியமாக ஆய்வு செய்யப்படும்.
மேலும் ஏற்கனவே சோதனை முறையில் உள்ள வருகை இல்லா ஆவணப்பதிவு முறை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், முழுமையான காகிதம் இல்லா பதிவு முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
என்று அமைச்சர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b