FQL செயலி மோசடி, ரூ.200 கோடி மக்கள் பணம் அபகரிப்பு – அமைச்சர் விஸ்வநாதன்
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச) மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் FQL என்ற மொபைல் செயலி மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி சுமார் ரூ.200 கோடி அளவுக்கு நடைபெற்றதாகக் கூறப்படும் ஆன்லைன் நிதி மோசடி தொடர்பாக இதுவரை 40
Vishwa


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச)

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் FQL என்ற மொபைல் செயலி மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி சுமார் ரூ.200 கோடி அளவுக்கு நடைபெற்றதாகக் கூறப்படும் ஆன்லைன் நிதி மோசடி தொடர்பாக இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் FQL என்ற மொபைல் செயலி மூலம் மிகப்பெரிய அளவில் ஆன்லைன் நிதி மோசடி நடைபெற்றதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

FQL செயலி மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் 40 முதல் 45 நாட்களில் முதலீடு செய்யப்பட்ட பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி பொதுமக்களை நம்ப வைத்து மோசடி நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், சுமார் ரூ.200 கோடி அளவுக்கு பொதுமக்களின் பணம் அபகரிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

FQL நிறுவனம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும், தங்களது உள்ளூர் காவல் நிலையத்திலேயே புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக மதுரைக்கு வந்து புகார் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக செந்தில்குமார் என்பவர், தான் முதலீடு செய்த ரூ.50 ஆயிரத்தை FQL நிறுவனம் திருப்பித் தர மறுப்பதாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் மேலூர் டிஎஸ்பி தலைமையில் 10 காவலர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், FQL நிறுவனம் தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ