சைபர் குற்றங்களை வேரறுக்க நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு அரண் - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச) தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். சட
Government taking serious measures to reduce police workload


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச)

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், டிஜிட்டல் யுகத்தின் சவால்கள் குறித்து விரிவாக பேசினார். இன்றைய காலகட்டத்தில் இணையம் என்பது ஆடம்பரம் அல்ல, அது அத்தியாவசியமாகி விட்டது. பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் தங்கள் பாடங்களுக்காகவும், கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்காகவும், முதியோர்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காகவும் இணையத்தை பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில் அவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் மிக முக்கியமான பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

வெறுமனே குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளை கைது செய்வது மட்டும் காவல்துறையின் பணி அல்ல என்றும், ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பே ஆயிரம் பேர் அந்த குற்றத்தில் பாதிக்கப்படாமல் தடுப்பதே உண்மையான வெற்றி என்றும் முதலமைச்சர் தனது உரையில் அழுத்தமாக கூறினார்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் கல்வி நிறுவனங்களும் காவல்துறையும் இணைந்து செயல்படும் ஒரு ஒருங்கிணைந்த சைபர் பாதுகாப்பு அமைப்பு விரைவில் உருவாக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இந்த புதிய அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு இளம் வயதிலேயே இணைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டத்திலேயே சைபர் பாதுகாப்பு, ஆன்லைன் மோசடிகள், போலி செயலிகள் மற்றும் பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறை சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், கிராமங்கள் தோறும் தொடர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

தகவல்களை சேகரிக்கும் காவல்துறையாக மட்டும் இல்லாமல், தொழில்நுட்பத்தை கையாளும் நவீன காவல்துறையாக தமிழக காவல்துறையை முழுமையாக மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தேவையான நவீன தொழில்நுட்ப கருவிகள், உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் மற்றும் கூடுதல் ஆள் பலம் ஆகியவை உடனடியாக வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Hindusthan Samachar / vidya.b