தலைநகரமா அல்லது கொலைநகரமா? – நயினார் நாகேந்திரன்
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) சென்னையில் அடுத்தடுத்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “தலைநகரமா அல்லது கொலைநகரமா?” என தமிழக அரசுக்கு தனது எக்ஸ் பதிவு வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார். அடையாறு ப
நயினார்


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னையில் அடுத்தடுத்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “தலைநகரமா அல்லது கொலைநகரமா?” என தமிழக அரசுக்கு தனது எக்ஸ் பதிவு வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அடையாறு பகுதியில் தவெக நிர்வாகி ஒருவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள், சென்னை நொளம்பூரில் இலவசமாக பீடி தர மறுத்த புலம்பெயர் தொழிலாளியை போதையில் இருந்த கும்பல் கொடூரமாக தாக்கியதாக வெளியான காணொளி பதைபதைக்கச் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஒரே நாளில் நடைபெற்ற இந்த சம்பவங்கள், தமிழகத்தில் நடைபெறும் “Reels” ஆட்சியின் “Reality”-யை மக்களுக்கு உணர்த்துவதாகவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சுமார் 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பிழைப்புத் தேடி தமிழகத்திற்கு வந்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்துவதுடன், மாநிலத்தின் உட்கட்டமைப்பையும் கேள்விக்குறியாக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சிக்கு வந்தது முதல் மக்களிடம் இருந்து தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதில் மட்டுமே முதல்வர் ஜோசப் விஜய் கவனம் செலுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள நயினார் நாகேந்திரன், பொதுமக்களின் பாதுகாப்பை இனியும் அலட்சியம் செய்யக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான சட்டப்பேரவை பதிலுரையில், தவெக ஆட்சிக்கு வந்தது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் குற்றங்கள், காவல் மரணங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கொடூரக் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தாம் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்த அரசு வைத்துள்ள செயல்திட்டங்களை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P