இந்தியா–பிரான்ஸ் உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது -பிரதமர் மோடி
புதுடெல்லி , 07 செப்டம்பர் (ஹி.ச.) இந்தியா–பிரான்ஸ் இடையிலான உறவு சமீப ஆண்டுகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புதிதாக கட்டப்பட்ட சுவாமிநாராயண் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. இத
A


புதுடெல்லி , 07 செப்டம்பர் (ஹி.ச.)

இந்தியா–பிரான்ஸ் இடையிலான உறவு சமீப ஆண்டுகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புதிதாக கட்டப்பட்ட சுவாமிநாராயண் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியா–பிரான்ஸ் இடையிலான கூட்டாண்மை நீண்டகால கலாசார மற்றும் அரசியல் உறவுகளின் வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ளது. சமீப ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு புதிய உச்சங்களை எட்டியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து, இந்தியாவும் பிரான்சும் சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை உருவாக்கி வருகின்றன.

தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பருவநிலை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் புதிய வேகம் மற்றும் உத்வேகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

பிரான்சில் உயிர்நீத்த இந்திய வீரர்களின் தியாகம் இன்றளவும் மக்களின் நினைவில் உள்ளது.

அதேபோல், சமஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்துவதில் பிரெஞ்சு அறிஞர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

பாரீசில் அமைக்கப்பட்டுள்ள சுவாமிநாராயண் கோவில், இந்தியாவின் பாரம்பரிய கைவினைத்திறனையும் பிரான்சின் நவீன பொறியியல் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட கோவில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் புதிய வாய்ப்புகளின் அடையாளமாக பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும்.

இந்த கோவில் பிரான்சின் கலாசார பன்முகத்தன்மையை மேலும் வளப்படுத்துவதுடன், இந்தியா–பிரான்ஸ் இடையிலான கலாசார உறவுகளுக்கும் புதிய உத்வேகம் அளிக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA