Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 07 செப்டம்பர் (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பழனி மலைக்கோயில் மகாமண்டபத்தின் நுழைவுவாயிலில் அமைந்துள்ள சிவன் சன்னதிகளுக்கு உபயத்திருப்பணியாக 89 கிலோகிராம் எடையில் வெள்ளித்தகடுகள் பொருத்தப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சரல் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மலைக்கோயில் மகாமண்டபத்தின் நுழைவுவாயிலின் உட்புறம் அமைந்துள்ள இரண்டு சிவன் சன்னதிகளுக்கும் வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணிகள் திட்டமிடப்பட்டன.
இதற்காகக் கரூர் பகுதியைச் சேர்ந்த ஜி.பத்ரிநாராயணன், பி.ஹேமலதா, பி.ஹேமந்த், எச்.திவ்யா, பி.விக்னேஷ், வி.வைஷ்ணவி, ஜி.விஷ்ணுபிரசாத், வி.சங்கீதா, வி.அஷ்வின் குமார், ஏ.நிகிதா, வி.பிரஜித்குமார் ஆகிய பக்தர்கள் ஒருங்கிணைந்து உபயத்தை ஏற்றுக்கொண்டனர்.
பக்தர்களால் உபயமாக வழங்கப்பட்ட, நேர்த்தியான கலை நயத்துடன் கூடிய நகாஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சுமார் 88 கிலோ 975 கிராம் (88,975 கிராம்) எடையிலான புதிய வெள்ளித்தகடுகள் திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டன.
தொடர்ந்து, இன்று (07.09.2026) காலை திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், முன்னிலையில் முறைப்படி எடை சரிபார்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்கச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர், அறங்காவலர்கள், திருக்கோயில் இணை ஆணையர், மலைக்கோயில் கண்காணிப்பாளர்கள், திருக்கோயில் சர்வ சாதகர் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN