Enter your Email Address to subscribe to our newsletters

பாக்பத், 07 செப்டம்பர் (ஹி.ச.)
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் இன்று அதிகாலை யாத்ரீகர்கள் சென்ற பேருந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு புறவழிச்சாலையில் படகாவ்ன் கட் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது குறித்து பாக்பத் காவல் கண்காணிப்பாளர் சூரஜ் குமார் ராய் கூறுகையில்,
இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
இந்த பேருந்தில் ராஜஸ்தானில் இருந்து பதாவுனுக்கு சுமார் 32 பேர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் 112 அவசர சேவை எண் மூலம் இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது.
பேருந்தில் சுமார் 32 பேர் இருந்தனர், பலர் பலத்த காயமடைந்துள்ளனர் என்றும் ராய் தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும் நான்கு காவல் துறை ரோந்து வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கவிழ்ந்த பேருந்தில் இருந்து காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சமுதாய சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
பலத்த காயமடைந்த சிலர் மேல் சிகிச்சைக்காக உயர் மருத்துவ மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ராய் கூறினார்.
விபத்தை உறுதிப்படுத்திய பாக்பத் மாவட்ட ஆட்சியர் அஸ்மிதா லால், வாகனம் கவிழ்ந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டது, இதில் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள சமுதாய சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார்.
Hindusthan Samachar / vidya.b