சர்க்காரியா கமிஷன் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - முதல்வருக்கு ஆர்.எஸ். பாரதி சவால்
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அளித்த பதிலுரை குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். சர்க்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சருக்கு முழுமையாக தெரியுமா என கேள்வி எழுப்பிய
Rsb


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அளித்த பதிலுரை குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

சர்க்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சருக்கு முழுமையாக தெரியுமா என கேள்வி எழுப்பிய அவர், அந்த விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்றும் சவால் விடுத்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி,

முதலமைச்சர் இன்று பதிலையே அளிக்கவில்லை என்றும், காவல்துறை தொடர்பான கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்காவிட்டாலும், விரைவில் பதில் அளித்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மூன்று நாட்கள் ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டு, தேடினேன், தேடினேன் எதுவுமே கிடைக்கவில்லை என்பதுபோல் பழைய பாட்டையே பாடிக்கொண்டிருக்கிறார் என விமர்சித்தார்.

கடந்த 100 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும், எம்ஜிஆர் கொண்டு வந்த சர்க்காரியா கமிஷன் குறித்து தொடர்ந்து பேசுவது செத்த பாம்பை அடிப்பது போன்றது என்றும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

சர்க்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சருக்கு முழுமையாகத் தெரியுமா என கேள்வி எழுப்பிய அவர்,

அண்ணா சாலையில் உள்ள அண்ணா தியேட்டர் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை எழுந்தபோது, சர்க்காரியா கமிஷனில் கலைஞருக்கு சொந்தம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாகவும் கூறினார்.

இதுகுறித்த உண்மையைப் பேச முதலமைச்சர் விஜய்க்கு தெம்பும் திராணியும் இருந்தால் பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவசரநிலை காலத்தில் சர்க்காரியா கமிஷன் கொண்டுவரப்பட்டதாகவும், அப்போது நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கலைஞரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டதாகவும் ஆர்.எஸ். பாரதி கூறினார்.

இந்த வரலாற்று விவரங்கள் திடீரென முளைத்த காளான்களுக்கு தெரியாது என்றும் அவர் விமர்சித்தார்.

சர்க்காரியா கமிஷன் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா என கேள்வி எழுப்பிய ஆர்.எஸ். பாரதி,

இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரியாத முதலமைச்சருக்கு ஸ்கிரிப்ட் யார் எழுதி கொடுத்தார்கள் என்பதை அவரிடம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றிருந்தால் தாங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்தவர்களுக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்றும், சினிமாவில் தனது ரசிகர்களை திருப்திப்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் முதலமைச்சர் சட்டப்பேரவையில் செய்து கொண்டிருக்கிறார் என்றும் ஆர்.எஸ். பாரதி விமர்சித்தார்.

மேலும், அமைச்சர் சென்ற கார் விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம், கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியிருக்க வேண்டும் என்றும், ஆனால் அதுகுறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் விஜய் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது போல் பேசுகிறார் என்றும், சிலரின் ஆதரவுடன் இந்த ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அந்த ஆதரவை அவர்கள் விலக்கிக் கொண்டால் ஆட்சி சரிந்துவிடும் என்றும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார். திமுகவைவிட பெரிய ஜாம்பவான்களை பார்த்து வளர்ந்த கட்சி திமுக என்றும் அவர் கூறினார்.

சட்டப்பேரவையில் சபாநாயகர் நடந்துகொள்ளும் விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,

சபாநாயகர் குறித்து பேசுவது சரியல்ல என்றும், சட்டப்பேரவையில் உண்மையை மட்டுமே முழுமையாகப் பேச வேண்டும் என்றும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

வரலாறு பலருக்கும் தெரியாமல் போய்விட்டதாகவும், பழைய வரலாற்றை மீண்டும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்றும், அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசிய பேச்சு குறித்து முதலமைச்சர் இதுவரை ஏன் விளக்கம் கேட்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அந்த விவகாரத்தில் அமைச்சர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பினார்.

மக்கள் தூங்கிக்கொண்டிருப்பதாகவும், ஒரு நாள் தாங்கள் அவர்களைத் தட்டி எழுப்புவோம் என்றும், அது ஏற்கனவே நடைபெற்றுள்ளதாகவும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ