Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே காம்பூர் ஊராட்சியில், பணியிடத்தில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டதாக துப்புரவுப் பணியாளர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, புகார் அளித்த சில நாட்களிலேயே துப்புரவுப் பணியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காம்பூர் ஊராட்சியைச் சேர்ந்த சசிகலா, கடந்த 8 ஆண்டுகளாக அப்பகுதியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.
பணியிடத்தில் தலித் தொழிலாளர்களுக்கு சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகவும், தேநீர் அருந்துவதற்கு பொதுவான குவளைகளைப் பயன்படுத்த அனுமதிக்காமல், தனியாக ஒருமுறை பயன்படுத்தும் கோப்பைகளைப் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், ஊராட்சி செயலாளரின் காலணிகளைச் சுமக்க வைக்கப்பட்டதாகவும் சசிகலா புகார் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் அவர் ஏற்கனவே மனு அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 1 மணியளவில் சசிகலா தற்கொலைக்கு முயன்றதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் வாந்தி எடுத்த நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சசிகலா அளித்த சாதிப் பாகுபாடு புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில், துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் சம்பந்தப்பட்ட காம்பூர் ஊராட்சி செயலாளர் இன்று (07.09.2026) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சாதிப் பாகுபாட்டை எந்த வகையிலும் அனுமதிக்காமல், சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.
புகார் அளித்த துப்புரவுப் பணியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ