Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை என்ற பெயரில் நடைபெறும் சில போக்குகள் குறித்து இன்று சட்டப்பேரவையில் முதல்வர் கவலை தெரிவித்துள்ளார்.
கருத்துரிமையை அனைவரும் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அரசியல் லாபத்திற்காக தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்த்தி பேசும் கலாச்சாரத்தை யாரும் ஊக்குவிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் பேசிய முதல்வர், கருத்துரிமையை எந்த அளவிற்கு, எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார். அரசியல் விமர்சனங்கள் கொள்கை ரீதியாக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் தாக்குதலாகவும், குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் இருக்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக ஆபாச அருவிகளும், வன்ம அருவிகளும் பெருக்கெடுத்து ஓடுவது போல, சமூக வலைதளங்களிலும், பொது மேடைகளிலும் தகாத வார்த்தைகள் அதிகரித்து வருவதாக முதல்வர் வேதனை தெரிவித்தார். இத்தகைய போக்கு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பெண்கள் குறித்து யார் ஆபாசமாகவோ, அவதூறாகவோ பேசினாலும் அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், இந்த அரசு தயவு தாட்சண்யமின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் உறுதிபட எச்சரித்தார்.
Hindusthan Samachar / vidya.b