தெலுங்கானாவில் ஒரு கோடி வாக்குகளை நீக்க சதி- பா.ஜ.க. எதிர்ப்பு வாக்காளர்களை குறிவைப்பதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு
ஐதராபாத் , 07 செப்டம்பர் (ஹி.ச.) தெலுங்கானாவில் ஒரு கோடி வாக்குகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க சதி நடைபெறுவதாக அந்த மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ரவீந்திர பாரதியில் விவசாய தல
A


ஐதராபாத் , 07 செப்டம்பர் (ஹி.ச.)

தெலுங்கானாவில் ஒரு கோடி வாக்குகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க சதி நடைபெறுவதாக அந்த மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள ரவீந்திர பாரதியில் விவசாய தலைவர் சாரம்பள்ளி மல்லாரெட்டி நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய ரேவந்த் ரெட்டி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்கக்கூடியவர்களை அடையாளம் காண சிறப்பு அமைப்புகள் மூலம் கண்காணிப்பு நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டினார். கடந்த 2009-ம் ஆண்டு முதல் வாக்குப்பதிவு முறையை ஆய்வு செய்து, பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொடங்கலில் 81 ஆயிரம் வாக்குகள்

தனது சட்டமன்ற தொகுதியான கொடங்கலில் மட்டும் சுமார் 81 ஆயிரம் வாக்குகள் ‘அனாமலீஸ்’ எனப்படும் முரண்பாடுகள் கொண்ட வாக்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரேவந்த் ரெட்டி கூறினார்.

வேலை மற்றும் தொழில் காரணமாக வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த ஏழை மக்களின் வாக்குகளும் நீக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஏழைகள் மற்றும் பழங்குடியின மக்களின் வாக்குகளையும் குறிவைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் என்றால் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் மட்டுமே என்று கருதக்கூடாது என்றும் அவர் கூறினார். பல்வேறு சமூகங்களை சேர்ந்த ஏழை மக்கள் மற்றும் பழங்குடியினரின் வாக்குகளும் இதில் பாதிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள வாக்குகளை பாதுகாப்பதன் மூலம் 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தோல்விக்கு அடித்தளம் அமைக்க முடியும் என்றும் ரேவந்த் ரெட்டி கூறினார்.

மேலும், நாடு முழுவதும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பிரதமர் மோடிக்கு எதிராக போராட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

சாரம்பள்ளி சேவைக்கு புகழாரம்

விவசாயிகளின் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த சாரம்பள்ளி மல்லாரெட்டியின் மறைவு விவசாய சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

குத்தகை விவசாயிகள் பிரச்சினை, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட பல்வேறு விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து சாரம்பள்ளி மல்லாரெட்டிக்கு ஆழ்ந்த புரிதல் இருந்ததாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் உரிமைகளுக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நடத்திய போராட்டங்களின் காரணமாகவே காங்கிரஸ் பல்வேறு முக்கிய சட்டங்களை கொண்டு வந்ததாகவும் ரேவந்த் ரெட்டி கூறினார்.

கம்யூனிஸ்ட் இயக்கங்களின் போராட்டங்கள் தங்கள் அரசு ஆட்சிக்கு வருவதற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியதாக அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA