Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 07 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா சட்டசபை சபாநாயகர் கட்டம் பிரசாத் குறித்து பி.ஆர்.எஸ். கட்சியின் மேலவை உறுப்பினர் தாதா மது அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சட்டசபையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சபாநாயகர் பதவிக்கு தனி மரியாதை இருப்பதாகவும், சட்டசபையில் சபாநாயகரை மதிப்பது அடிப்படை மரபு என்றும் ரேவந்த் ரெட்டி கூறினார்.
சபாநாயகர் குறித்து ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்துவதை அரசு ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தாதா மதுவின் கருத்துகளுக்கு பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் (கேசிஆர்) பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி வலியுறுத்தினார்.
மேலும், தாதா மதுவை சட்டசபை மேலவையில் இருந்து உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மேலவை தலைவரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
சபாநாயகரை அவமதிப்பது ஒரு தனிநபருக்கு ஏற்பட்ட அவமதிப்பு மட்டுமல்ல என்றும், அது சட்டசபையில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் அவமதிப்பதாகும் என்றும் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
பி.ஆர்.எஸ். கட்சி உறுப்பினர்களை கேசிஆர் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து, அவர்களை தூண்டிவிட்டு அனுப்புவதால்தான் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சபாநாயகரை திட்டமிட்டு அவமதிப்பதாகவும் ரேவந்த் ரெட்டி விமர்சித்தார்.
அரசு பல்வேறு சந்தர்ப்பங்களில் பொறுமையை கடைப்பிடித்து வருவதாகவும், அதை தங்களின் பலவீனமாக யாரும் கருதக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
தனது அரசியல் வாழ்க்கையில் பல சட்டசபைகளை பார்த்துள்ளதாகவும், சட்டசபையில் இவ்வளவு ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை இதுவரை கேட்டதில்லை என்றும் ரேவந்த் ரெட்டி கூறினார்.
இதுபோன்ற செயல்களை தொடர்ந்து மன்னித்து வந்தால் ஜனநாயக அமைப்புகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும், மரியாதையும் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
பா.ஜ.க. மீதும் குற்றச்சாட்டு
இதனிடையே பா.ஜ.க. மீதும் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார்.
பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்களை பாதுகாக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருவதாக அவர் கூறினார்.
சட்டசபையின் அலுவல் ஆலோசனைக்குழு (பி.ஏ.சி.) கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட பிறகே பா.ஜ.க. எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA