Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச)
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதி கோரி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அன்புணி தாக்கல் செய்த மனுவில், திருப்பூர் காட்டுப்பாளையம் பகுதியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவும், தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தவும் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு ஆண்டுதோறும் காவல்துறை சார்பில் பிறப்பிக்கப்படும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றத் தயாராக இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஆண்டு இதேபோன்று விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்னை உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, மனு தொடர்பாக காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ