Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 07 செப்டம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அய்யம்பெருமாள் முதலியார் தெருவைச் சேர்ந்த சங்கர் (60), அவரது சகோதரர் மாரிக்கண்ணன் (54) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் (50) ஆகியோர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றனர்.
சுபநிகழ்ச்சிகள் மற்றும் திருவிழா காலங்களில் மட்டுமே எட்டயபுரத்தில் உள்ள தங்களது வீடுகளுக்கு வந்து செல்வது வழக்கம் என்பதால், மற்ற நாட்களில் வீடுகள் பூட்டியே கிடப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை சங்கர் மற்றும் சுந்தர் வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீடுகளில் விசாரணை நடத்தியபோது, மாரிக்கண்ணன் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுந்தர் வீட்டில் இருந்து வெள்ளி கொலுசு மற்றும் ரூ.1,500 பணம் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சங்கர் மற்றும் மாரிக்கண்ணன் வீடுகளில் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, மூன்று வீடுகளிலும் புகுந்த மர்ம நபர், அருகில் வசித்து வரும் அனந்தம்மாள் என்ற 90 வயது மூதாட்டியின் வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.
அப்போது தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் அருகே அந்த நபர் படுத்திருந்ததாகவும், மூதாட்டி திரும்பிப் பார்த்தபோது மர்ம நபர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, அவர் யார் என கேட்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அந்த நபர் மூதாட்டியின் வாயில் துணியை திணித்து, அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மூதாட்டி கூச்சலிட்ட பிறகே இந்த சம்பவம் அப்பகுதியினருக்கு தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மூன்று வீடுகளிலும் மற்றும் மூதாட்டியின் வீட்டிலும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான அனந்தம்மாள் கண்ணீருடன் கூறுகையில்,
என்னை மிகவும் பலமாக தாக்கி சித்திரவதை செய்தார். என் கணவரிடம் கூட இதுபோன்று அடி வாங்கியதில்லை. இவ்வளவு செய்ததற்கு என்னை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம்” என வேதனையுடன் தெரிவித்தார்.
எட்டயபுரம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பல சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருப்பதாகவும், போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் எட்டயபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam