Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 07 செப்டம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே முள்ளக்காடு, கோவளம், புள்ளாவெளி உள்ளிட்ட பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உப்பளங்களில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முள்ளக்காடு, கோவளம், புள்ளாவெளி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் உணவு உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தொழிலை நம்பி ஆண், பெண் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், கோவளம் கடற்கரைப் பகுதியில் மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முள்ளக்காடு, கோவளம், புள்ளாவெளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,000 ஏக்கர் நிலங்களை தமிழக அரசு, சிப்காட் மூலம் கையகப்படுத்தி, கொரிய நாட்டு நிறுவனத்துடன் இணைந்து கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
கப்பல் கட்டும் தளம் அமைந்தால் உப்பளம் மற்றும் மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழியும் எனக் கூறி, அப்பகுதி உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், வியாபாரிகள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கப்பல் கட்டும் தளத் திட்டத்தை தற்போதைய இடத்தில் இருந்து கைவிட்டு, மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று கோவளம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் உப்பளங்களில் இறங்கி கைகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கப்பல் கட்டும் தளத் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும், இல்லையெனில் அடுத்தகட்டமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam