காவல்துறைக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரை குறித்து தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், காவல்துறை மானியக் கோரிக்கையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதி
Premalatha Vijay


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரை குறித்து தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,

காவல்துறை மானியக் கோரிக்கையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்து காவல்துறையினரும் அவர்களது குடும்பத்தினரும் காத்திருந்த நிலையில், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என தெரிவித்தார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் தான் சுட்டிக்காட்டியதாக கூறிய அவர்,

சட்டப்பேரவை முடிவதற்குள் காவல்துறையினருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். நீண்ட காலமாக காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவலர்களுக்கு நிரந்தர பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழக ஊர்க்காவல் படையில் சுமார் 16 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். காவலர்களின் குடும்பத்தினருக்கான மருத்துவக் காப்பீட்டில் வயதான பெற்றோரையும் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் இந்தியாவுக்குள் பரவும் பதிவுகளை அரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

லாக்அப் மரணங்களில் உயிரிழந்த சபரிவர்மன், அருணாச்சலம் உள்ளிட்டோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவது போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் கூறினார்.

பெண்களைப் பற்றி தவறாக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்ததை வரவேற்ற பிரேமலதா, சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக தவறான பதிவுகள் வெளியிடப்படுவதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், கொள்முதல் செய்யப்படாமல் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகள் வரை சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தனது தொகுதியில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பத்திரப்பதிவுத் துறையில் ஊழலை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN