Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 08 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் அரசு மற்றும் நிர்வாக சேவைகளை பொதுமக்களுக்கு மேலும் சிறப்பாகவும், விரைவாகவும் வழங்குவதில் எம்எல்ஏக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார்.
தெலுங்குதேசம் கட்சியின் தேசிய தலைவரும், ஆந்திர மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, 2-வது நாளாக நடைபெற்ற ‘லீடர்ஷிப் கான்க்ளேவ்’ கூட்டத்தில் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேசினார்.
அப்போது, சில சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்களுக்கு அரசு சேவைகள் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருவதாகவும், அங்கு பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி இலவச மணல் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வருவாயை அரசு விட்டுக்கொடுத்து வருவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மணல் சட்டவிரோதமாக பிற மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை கடுமையாக தடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
கடந்த ஆட்சியில் மதுபானக் கொள்கை முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், தற்போது மதுபான விற்பனையில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மதுபானங்களை அதிகபட்ச சில்லறை விலையான எம்ஆர்பியை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மதுபான விற்பனையில் முறைகேடுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
அரசுக்கு எதிராக பரப்பப்படும் போலியான தகவல்களை உண்மை தகவல்களுடன் திறம்பட முறியடிக்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
வாட்ஸ்அப் நிர்வாகம் மூலம் பல்வேறு அரசு சேவைகள் ஆன்லைனிலேயே வழங்கப்பட்டு வருவதாகவும், கியூஆர் கோடு மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பான பட்டாதார் பாஸ்புக்குகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு தொகுதியிலும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளை தாமாக முன்வந்து கண்டறிந்து தீர்வு காண வேண்டும் என்றும், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு மனிதநேயத்துடன் அணுகினால் எம்எல்ஏக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
மாநிலம் முழுவதும் நிலத்தகராறுகளுக்கு தீர்வு காண அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும், 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நில ஆவணங்களை சீரமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ‘சஞ்சீவனி’ திட்டத்தின் மூலம் டிஜிட்டல் சுகாதார பதிவுகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ.20,400 கோடி மதிப்பிலான 616 வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதுடன், அரசு சேவைகளை எளிதாகவும், வெளிப்படையாகவும் மக்களுக்கு வழங்குவதில் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA