Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 08 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்குதேசம் கட்சியின் மத்திய அலுவலகத்தில் நடைபெற்று வரும் தலைமைத்துவ மாநாட்டின் 2-வது நாளில், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ், சமூக வலைத்தளங்களை திறம்பட பயன்படுத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது நிர்வாகிகளை நோக்கி, ‘‘உங்களில் எத்தனை பேர் சமூக வலைத்தளங்களை தீவிரமாக பயன்படுத்துகிறீர்கள்?’’ என்று அவர் கேள்வி எழுப்பினார். அரசியல் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அவர், அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் தீவிரமாக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் வரை அனைவரும் தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் நாரா லோகேஷ் அறிவுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியை உதாரணமாக குறிப்பிட்ட அவர், பிரதமரும் செல்பி வீடியோக்கள் மூலம் தனது கருத்துகளையும், அரசின் பணிகளையும் மக்களிடம் நேரடியாக கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
தானும் சுஜ்லான் காற்றாலை திட்டத்தின் அடிக்கல் நாட்டுதல் மற்றும் டி.எஸ்.சி. தொடர்பாக பரப்பப்பட்ட தவறான தகவல்கள் குறித்து செல்பி வீடியோக்கள் வெளியிட்டு உண்மை நிலையை மக்களிடம் விளக்கியதாக கூறினார்.
விஷயம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், அதுகுறித்த உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கட்சி நிர்வாகிகளின் பொறுப்பு என்று நாரா லோகேஷ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், அந்த பிரசாரங்களுக்கு சமூக வலைத்தளங்களில் உண்மையான தகவல்களுடன் உடனுக்குடன் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தவறான தகவல்கள் பரவும்போது அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிடாமல், உண்மை நிலையை ஆதாரங்களுடன் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், அமராவதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை சர்வதேச அளவில் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பரவலாக பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் நாரா லோகேஷ் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
அரசின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதுடன், எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரங்களுக்கு உண்மைகளின் அடிப்படையில் பதிலடி கொடுக்க சமூக வலைத்தளங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதே அவரது அறிவுரையின் முக்கிய அம்சமாக இருந்தது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA