Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 செப்டம்பர் (ஹி.ச.)
வரும் செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 18-வது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என டெல்லி போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
சுமார் 30 பிரிக்ஸ் உறுப்பு மற்றும் கூட்டாளர் நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதால் சர்வதேச தலைவர்களின் நடமாட்டத்தை முன்னிட்டு தலைநகரில் சில முக்கிய சாலைகளில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றுப்பாதைகள் அமல்படுத்தப்படும் என இன்று வெளியிடப்பட்ட ஆலோசனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்கள் பயணங்களை நன்கு முன்கூட்டியே திட்டமிட்டு கூடுதல் நேரத்துடன் புறப்பட வேண்டும் எனவும், குறிப்பாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் பயணிப்போர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவிஐபி வாகனங்கள் செல்லும் வழித்தடங்களில் தேவையற்ற பயணத்தை தவிர்த்து, முடிந்தவரை மெட்ரோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து போலீஸாரின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் ஏற்படக்கூடிய தாமதத்தை கருத்தில் கொண்டு சற்று முன்கூட்டியே தங்கள் பயணத்தை தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த உடனுக்குடன் தகவல்களை பெற டெல்லி போலீஸ் மற்றும் டெல்லி போக்குவரத்து போலீஸின் அதிகாரப்பூர்வ தளங்களை பின்தொடருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே உச்சி மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் ஹோட்டல் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / vidya.b