இடைத்தேர்தல் அறிவிப்பு எதிரொலி -தாராபுரத்தில் பறக்கும் படையினர் தீவிர சோதனை
திருப்பூர், 08 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்
பறக்கும் படை


திருப்பூர், 08 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாராபுரம், மூலனூர், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் தொகுதியின் நுழைவுப் பகுதிகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி அதிக அளவில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை எடுத்துச் செல்லப்படுகிறதா என அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

பறக்கும் படையினருடன் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து இந்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகத்திற்கிடமான வகையில் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பணத்திற்கான காரணம் மற்றும் அதற்கான உரிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தாராபுரம் தொகுதிக்கு உள்பட்ட வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும் போது, அதற்கான உரிய ரசீது மற்றும் ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, ரூ.49 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் போது, அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் ரசீதுகளை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்லப்பட்டால், தேர்தல் விதிமுறைகளின்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடியும் வரை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து, அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என வருவாய்த் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனால், தாராபுரம் தொகுதியில் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையும் கண்காணிப்புப் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P