7 நாட்களில் மொபைல் போன் தடை நீக்கம்- திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி
திருவள்ளூர், 08 செப்டம்பர் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் மொபைல் போன்களை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, சில நாட்களிலேயே நீக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை சுவ
திருத்தணி


திருவள்ளூர், 08 செப்டம்பர் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் மொபைல் போன்களை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, சில நாட்களிலேயே நீக்கப்பட்டுள்ளது.

தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு செல்லலாம் என கோவில் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 52 முக்கிய கோவில்களில், செப்டம்பர் 1 முதல் கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இது ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

இதன்படி, திருத்தணி முருகன் கோவிலிலும் கடந்த செப்டம்பர் 1 முதல் பக்தர்கள் மொபைல் போன்களை தரிசனப் பகுதிக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைத்திருக்க மலைக்கோவில் பகுதியில் இரண்டு பாதுகாப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டன.

ஆனால், மொபைல் போன்களை ஒப்படைப்பதற்கும், பின்னர் மீண்டும் பெற்றுச் செல்வதற்கும் பக்தர்கள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் குறித்து பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ், முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மொபைல் போன் தடையில் விலக்கு அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். மேலும், கேமரா மற்றும் வீடியோ பதிவு வசதி இல்லாத சாதாரண மொபைல் போன்களை கொண்டு செல்லவும் தடையில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருத்தணி முருகன் கோவிலில் தற்போது அனைத்து பக்தர்களும் மொபைல் போன்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், தரிசனத்திற்கு செல்லும்போது மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருக்க வேண்டும் என கோவில் ஊழியர்கள் பக்தர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

திருத்தணி முருகன் கோவில், அறுபடை வீடுகளில் ஒன்றாக இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

குறிப்பாக விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மொபைல் போன் பாதுகாப்பு கவுண்டர்களில் ஏற்படும் கூடுதல் காத்திருப்பை தவிர்க்கும் வகையில் இந்த மாற்றம் பக்தர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam