கோவை ‘11 to 11’ பாரில் மதுப்பிரியர்கள் பயங்கர மோதல் – நாற்காலி, பாட்டில்களால் சரமாரி தாக்குதல்
கோவை, 08 செப்டம்பர் (ஹி.ச.) கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் செயல்பட்டு வரும் ‘11 to 11’ மதுபானக் கூடத்தில் மதுப்பிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் தகராறு, கடும் மோதலாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர்
பார்


கோவை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் செயல்பட்டு வரும் ‘11 to 11’ மதுபானக் கூடத்தில் மதுப்பிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் தகராறு, கடும் மோதலாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் நாற்காலி மற்றும் பாட்டில்களால் தாக்கிக் கொள்ளும் செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தண்ணீர் பந்தல் சாலையில் செயல்பட்டு வரும் இந்த மதுபானக் கூடத்திற்கு நேற்று இரவு சிலர் மது அருந்த சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கிடையே எதிர்பாராத விதமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மது போதையில் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் பாருக்குள் மட்டுமின்றி வெளியேயும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.

தொடர்ந்து ஆத்திரமடைந்த சிலர், அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் மதுபாட்டில்களை எடுத்தும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் அச்சமடைந்து அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.

இதுகுறித்து தகவலறிந்த பீளமேடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பாரில் இருந்த ஒருவர் தனது செல்போனில் மோதல் சம்பவத்தை வீடியோ பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

அதில், மதுப்பிரியர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும் வகையில் செயல்பட்டதாக கூறப்படும் மதுபானக் கூடத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam