தாயாபுரம் தேவாலயத்தை அகற்றக் கோரிய வழக்கு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
மதுரை, 08 செப்டம்பர் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தாயாபுரம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தேவாலய கட்டிடத்தை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிவகங்கையைச் சேர்ந்த மாரிமுத்து என
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தாயாபுரம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தேவாலய கட்டிடத்தை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர், தாயாபுரம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தேவாலய கட்டிடத்தை அகற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் தண்டபாணி, திலீப்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, தேவாலயம் அமைந்துள்ள இடம் தனியார் பட்டா நிலம் என்பதும், அப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பிரார்த்தனைக் கூடம் செயல்பட்டு வந்ததும் உறுதி செய்யப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், பிரார்த்தனைக் கூடத்தை மறுகட்டுமானம் செய்வதற்காக 2018 செப்டம்பர் மாதம் விண்ணப்பிக்கப்பட்டு, உள்ளாட்சி திட்ட அமைப்பால் திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். தேவாலயத்துக்கும் அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இடையே 45 மீட்டர் தூரம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக அங்கு வழிபாடு செய்து வருவதுடன், பிரார்த்தனைக் கூடம் செயல்படுவதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர்.

மேலும், தேவாலய கட்டுமானம் அல்லது பிரார்த்தனைக் கூடத்தின் பயன்பாடு எந்த சட்ட விதிகளையும் மீறுவதாகவும் ஆதாரம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், “வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியாக இணைந்து வாழும் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதத்தை, ஆதாரமற்ற அச்சத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்த முடியாது” என தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மனுதாரர் சம்பந்தப்பட்ட பகுதியில் வசிப்பவரும் அல்ல என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் சட்டவிரோதமோ, நடைமுறை குறைபாடோ இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam