Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 செப்டம்பர்
(ஹி. ச.)
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் சில நிமிடங்களிலேயே முன்பதிவு நிறைவடைந்ததால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த இரண்டு நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்டுகள் தீர்ந்ததால், பல பயணிகளுக்கு வெயிட்டிங் லிஸ்ட் கிடைத்தது.
இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்று காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இன்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் முழுமையாக பதிவு செய்யப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், பயணிகளின் தேவைக்கு ஏற்ப போதிய எண்ணிக்கையில் முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைக்காததால் பலரும் டிக்கெட் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பதால், IRCTC இணையதளத்தில் டிக்கெட் பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சிலர் முன்பதிவு செய்ய முயன்ற நிலையில், சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாகவும், வெயிட்டிங் லிஸ்ட் மட்டுமே கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்திய ரயில்வேயின் புதிய கிளவுட் அடிப்படையிலான பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS), ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள் மற்றும் 40 லட்சம் விசாரணைகளை கையாளும் வகையில் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஒரு நிமிடத்திற்கு சுமார் 25 ஆயிரம் முதல் 32 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை மட்டுமே பதிவு செய்யும் வசதி இருந்த நிலையில், தற்போது முன்பதிவு சேவை பல மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பதால், இணையதளத்தில் தாமதம் ஏற்படுவதுடன், சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் தீர்ந்து விடுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவதுடன், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பெட்டிகள் மற்றும் டிக்கெட் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam