Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தன்னை தொடர்புபடுத்தி தெரிவித்த கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து, முன்னாள் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 2016 முதல் 2026 வரை 10 ஆண்டுகள் பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியதாகவும், 45 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் பணியாற்றி வருவதாகவும் இ.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தனது மூத்த மகன் ஆண்டோ மதிவாணன், தனது விருப்பத்திற்கு மாறாக பெசன்ட் நகரைச் சேர்ந்த அந்தோணியின் மகள் மெர்லினா அன் என்பவரை காதலித்து வந்ததாகவும், பின்னர் இருவருக்கும் 2017 ஜனவரி 20-ஆம் தேதி திருமணம் செய்து வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு தனது மகனும் மருமகளும் திருவான்மியூரில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், அந்த வீட்டிற்கு நிகழ்ச்சிக்காக இரண்டு முறை மட்டுமே சென்றதாகவும், மற்றபடி அவர்களுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அந்த வீட்டில் பணியாற்றிய ரேகா என்ற பணிப்பெண் மெர்லினா அன்னால் துன்புறுத்தப்பட்டதாக 2024 ஜனவரி 16-ஆம் தேதி தொலைக்காட்சி வாயிலாக அறிந்ததாகவும், மறுநாள் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரில் வாக்குமூலம் பெற்றதாகவும் இ.கருணாநிதி கூறியுள்ளார்.
2024 ஜனவரி 18-ஆம் தேதியே திருவான்மியூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் இந்த உண்மையை மறைத்து, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியான பின்னரே ஜனவரி 20-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் சில நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டதாகவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்திருப்பதாக இ.கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஜனவரி 24-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றத்தில் 7 நாட்களுக்குள் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டிருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனக்கும் மெர்லினா அன்னுக்கும் தொடர்பில்லை
மெர்லினா அன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் இ.கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். மேலும், மெர்லினா அன்னும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனின் மருமகளான மார்சியா அன்னும் உடன்பிறந்த சகோதரிகள் என்பதால், சபாநாயகர் குடும்பத்துடன் மெர்லினா அன்னுக்கு நெருக்கம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லாட்டரி மார்ட்டினின் மனைவியும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான லீமா ரோஸின் உறவினர் எனக் கூறி, அவரது உதவியாளர் போல் மெர்லினா அன் செயல்பட்டு வருவதாகவும், இதுதொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருவதாகவும் இ.கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தன்னை தொடர்புபடுத்தி முதலமைச்சர் சட்டப்பேரவையில் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர், திமுக ஆட்சியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதும், அதனைத் தொடர்ந்து காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து கைது செய்ததும் உண்மை என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P