Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் தொழுப்பேடு பகுதியில் உள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
வெற்று விளம்பரங்களை விட, விளைவித்த நெற்பயிர்கள் முக்கியமானவை” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் சுமார் 50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும் நிலையில், விவசாயிகள் விளைவிக்கும் நெல்லைப் பாதுகாக்க மாநிலம் முழுவதும் போதுமான சேமிப்புக் கிடங்குகள் இல்லை என்றும், உள்ளவற்றில் பெரும்பாலானவை மேற்கூரையற்ற திறந்தவெளி கிடங்குகளாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், நவீன நெல் சேமிப்புக் கிடங்குகளை அதிகரிப்பதற்கு பதிலாக, ரூ.10 கோடி செலவில் 43,500 விவசாயிகளுக்கு மட்டும் தார்பாய்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ள நிலையில், வெறும் 43,500 பேருக்கு மட்டும் தார்பாய்கள் வழங்கினால், மீதமுள்ள விவசாயிகளின் உழைப்பு மழையில் நனைந்து வீணாகும் என்பதை முதல்வர் சிந்திக்க வேண்டாமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறப்பதை விளம்பரப்படுத்த ரூ.5 கோடி வரை செலவிடுவதைவிட, தமிழகத்தில் உள்ள திறந்தவெளி அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை அமைப்பதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என பேசும் முதல்வர் விஜய், தற்போது தான் முதலமைச்சராக இருக்கும் காலகட்டத்திலேயே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P