Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 08 செப்டம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதாக கூறப்படும் கள்ளச்சாராயத்தை குடித்ததால் பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் விசாரணை ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கான காரணங்கள் மற்றும் அதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த ஆணையம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் கடமை தவறிய போக்கும் இந்த துயர சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளச்சாராய விற்பனை மற்றும் மெத்தனால் கலக்கப்பட்ட சாராயம் குறித்து சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே தகவல்கள் கிடைத்திருந்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் விசாரணை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக கள்ளச்சாராய விற்பனையை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க முடியாமல் போனதுடன், பின்னர் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வழிவகுத்ததாக கூறப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான வேதிப்பொருளான மெத்தனால் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி பகுதிக்கு கொண்டு வரப்பட்டதிலும் அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாடு இருந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது. மெத்தனாலின் போக்குவரத்து மற்றும் விற்பனையை கண்காணித்து ஆய்வு செய்ய அதிகாரம் பெற்ற துறைகளின் கவனக்குறைவும் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு மதுவிலக்கு உள்ளிட்ட 12 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் செயல்பாடுகளில் குறைபாடு இருந்ததாகவும், அவர்கள் தங்களது கடமைகளை முறையாக மேற்கொள்ளத் தவறியதாகவும் விசாரணை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் கச்சிராயப்பாளையம் காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல்துறையினர், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் கண்காணிப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளும் விசாரணை ஆணையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய அதிகாரிகள் மீது, தொடர்புடைய விதிகளின் கீழ் துறை சார்ந்த விசாரணையை தொடங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் அதிகாரிகளின் கடமை தவறல் குறித்து விசாரணை ஆணையம் கடுமையான கருத்துகளை பதிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam