Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 08 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 11.66 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டது. இதற்கிடையே, கர்நாடக அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இல்லை என்று கூறி, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
தற்போதைய நீர் இருப்பு நிலவரத்தில் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால், கர்நாடகத்தில் குடிநீர் வினியோகத்தில் கடும் சிரமம் ஏற்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்தது. எனவே, தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.
இந்த கோரிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்த காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் இந்த பரிந்துரை மீது காவிரி மேலாண்மை ஆணையம் இன்று பிற்பகல் 3 மணிக்கு முடிவு எடுக்கிறது.
இதையடுத்து, தமிழகத்துக்கு திறக்கப்பட வேண்டிய காவிரி நீரின் அளவு குறித்து இறுதி முடிவு வெளியாகும்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA