Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 08 செப்டம்பர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊர் மக்கள் அனைவரும் வீடுகளை பூட்டிவிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்வதால், கீழ்குப்பம் கிராமமே மனித நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
போச்சம்பள்ளி அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்றாக திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிப்பது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக கிராம மக்கள் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து, வீடுகளில் மஞ்சள் துணி கட்டிய உண்டியலில் சிறுகச் சிறுக பணம் சேமித்து வருகின்றனர். 3 ஆண்டுகளாக சேமித்த காணிக்கை தொகையை ஒன்றாக திரட்டி, இந்த ஆண்டுக்கான திருப்பதி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, நேற்று இரவு கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் 6 பேருந்துகள் மற்றும் 5 கார்களில் பக்தி கோஷங்களுடன் திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றனர். கிராமத்தில் வயதான முதியவர்கள் சிலர் மட்டுமே உள்ளனர்.
ஒட்டுமொத்த கிராம மக்களும் வீடுகளை பூட்டிவிட்டு சென்றதால், கீழ்குப்பம் கிராமம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதையடுத்து பூட்டிய வீடுகள் மற்றும் கிராம மக்களின் உடைமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பாரூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது சேமிப்புப் பணத்தை ஒன்றாக திரட்டி, ஒட்டுமொத்த கிராமமே திருப்பதி சென்ற இந்த வித்தியாசமான வழக்கம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam