இராஜகிரியில் வண்டல் மண் சரிந்து ஆசாரி பரிதாப உயிரிழப்பு
தஞ்சாவூர், 08 செப்டம்பர் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா இராஜகிரி பாவாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சப்தகிரிவாசன் என்ற செந்தில் (45). ஆசாரி வேலை செய்து வந்த இவருக்கு ஹேமாவதி (35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இருவ
விபத்து


தஞ்சாவூர், 08 செப்டம்பர் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா இராஜகிரி பாவாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சப்தகிரிவாசன் என்ற செந்தில் (45). ஆசாரி வேலை செய்து வந்த இவருக்கு ஹேமாவதி (35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், செந்தில் தனது வீட்டின் அருகே உள்ள சுண்ணாம்பு கால்வாய் வாய்க்கால் பகுதியில் வண்டல் மண் எடுக்கச் சென்றுள்ளார். கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் கால்வாயில் தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டதால், மழைக்காலத்தில் வீட்டைப் பாதுகாக்கவும், அவசரத் தேவைக்காகவும் வண்டல் மண்ணை எடுக்க அவர் முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த வண்டல் மண் சரிந்து செந்திலை மூடியது. இதில் மண்ணுக்குள் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மண் சரிவில் சிக்கி உயிரிழந்த செந்திலின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P