Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில், நீதிமன்றத் தடை இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 16ஆம் தேதி நிறைவடைகிறது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த இரு தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக தனித்துப் போட்டியிடுமா அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்குமா என்பது குறித்து அக்கட்சிக்குள் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் கட்சி போட்டியிடும் விதம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், அதிமுக ஏற்கனவே விருப்ப மனுக்களை பெறத் தொடங்கியுள்ள நிலையில், பாஜகவின் முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்ற தொகுதிகளாகும். அந்த தொகுதிகளின் முன்னாள் எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், பாஜக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ