Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் காணொலி காட்சி வாயிலாக இணைகின்றனர்.
கூட்டத்தில், கடந்த ஆண்டு பருவமழையின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்க உள்ளார்.
மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய நிலை, நீர்நிலைகளின் கொள்ளளவு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள், நிவாரண முகாம்கள் அமைத்தல், உணவு, குடிநீர், மருந்து பொருட்கள் இருப்பு வைத்தல் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் முதல்வர் உத்தரவிட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b