மக்கள் தொகை கணக்கெடுப்பில் திறந்தவெளி பதிவுக்கு எதிர்ப்பு - சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம்
சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச) மக்கள் தொகை கணக்கெடுப்பில் திறந்தவெளி பதிவு முறையை கைவிட வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த தனித் தீர்மானத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் இன்ற
மக்கள் தொகை கணக்கெடுப்பில் திறந்தவெளி பதிவுக்கு எதிர்ப்பு - சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம்


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச)

மக்கள் தொகை கணக்கெடுப்பில் திறந்தவெளி பதிவு முறையை கைவிட வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த தனித் தீர்மானத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் இன்று பேரவையில் முன்மொழிய உள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதி விவரங்களை பதிவு செய்வதில் திறந்தவெளி முறையை பின்பற்றுவதால் தரவுகளில் குழப்பம் ஏற்படுவதாகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உண்மையான எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை உருவாகும் என்றும் தமிழக அரசு கருதுகிறது.

எனவே, இந்த திறந்தவெளி பதிவு முறையை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் அமையும் என தெரிகிறது. மேலும், இந்த தீர்மானத்தில் இரண்டு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளன.

ஒன்று, மாநில மற்றும் மத்திய அரசுகளால் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி பட்டியலை, கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப்படும் செயலியில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதி விவரங்களை சேகரிக்கும் போது, பட்டியலில் உள்ள பெயர்களின் அடிப்படையில் மட்டுமே விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சாதி கணக்கெடுப்பு மிகவும் துல்லியமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறும் என அரசு நம்புகிறது.

இதனிடையே இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளில் மற்ற இரு முக்கிய அம்சங்களும் இடம்பெற உள்ளன. தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த மசோதா தனியார் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, திமுக ஆட்சியின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்த இந்திய தணிக்கை துறையின் (CAG) அறிக்கைகளும் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

Hindusthan Samachar / vidya.b