Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய 10 நாள் சதுர்த்திப் பெருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக, திருநாள் மண்டபத்தில் உற்சவர் கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து அடுக்கு தீபம், பஞ்சமுக தீபம், நாகதீபம் உள்ளிட்ட பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் சர்வ அலங்காரத்தில் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளிய கற்பக விநாயகர், கோயிலைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
சுமார் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பிள்ளையார்பட்டி கோயில், மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இங்குள்ள மூலவர் கற்பக விநாயகர் சுமார் 6 அடி உயரத்தில், வடக்கு நோக்கி வலம்புரி விநாயகராக அருள்பாலிப்பது கோயிலின் சிறப்பம்சமாகும்.
தொடர்ந்து நடைபெற உள்ள விழா நிகழ்ச்சிகள்:
இன்று முதல் தினமும் காலையில் வெள்ளி கேடகத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு 9 மணியளவில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாம் நாள் மாலையில் யானை வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
ஒன்பதாம் நாள் காலை விநாயகர் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலையில் தேரோட்டமும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலை கோயில் திருக்குளத்தில் சதுர்த்தித் தீர்த்தவாரியும், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
விநாயகரை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பிள்ளையார்பட்டிக்கு வருகை தருகின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோனாபட்டு அரு. ராமசாமி, அரிமளம் நா. கண்ணன் ஆகிய காரியக்காரர்கள் தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P