Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 08 செப்டம்பர் (ஹி.ச.)
பிரிக்ஸ் நாடுகளுடன் ரஷ்யா மேற்கொள்ளும் வர்த்தகத்தில் 90 சதவீதம் தேசிய நாணயங்களில் நடைபெற்று வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கான டாலர் அடிப்படையிலான நிதி அமைப்புக்கான அணுகலை அமெரிக்கா கட்டுப்படுத்தியதே இதற்கு முக்கிய காரணம் என ரஷ்யா கூறியுள்ளது.
சர்வதேச நாணயமாக டாலரைப் பயன்படுத்துவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையில், அமெரிக்காவின் கொள்கைகளே டாலரைப் பயன்படுத்துவதற்கு சாதகமான சூழலைத் தடுக்கின்றன.
இதன் காரணமாகவே சர்வதேச வர்த்தகத்தில் தேசிய நாணயங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் இந்தியா சார்பில் புதுடெல்லியில் உள்ள இந்தியா ஹேபிடாட் சென்டரில் காணொலி வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் இதனைத் தெரிவித்தார்.
வரவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்தியப் பயணம் தொடர்பாக இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
பெஸ்கோவ் கூறுகையில், பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானதாக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. மாறாக, உறுப்பு நாடுகள் தங்களது தேசிய நலன்களை ஒருங்கிணைந்து முன்னெடுப்பதற்கான ஒரு தளமாக அது உருவெடுத்துள்ளது.
மேற்கத்திய நாடுகளுடன் மோதலை உருவாக்குவது அதன் நோக்கம் அல்ல என்றார்.
டாலர் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
அவர்கள் தங்களது பணத்தை (டாலரை) நாங்கள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் எங்களது பணத்தை (தேசிய நாணயங்களை) பயன்படுத்துவோம்.
எந்தவிதமான டாலர் எதிர்ப்புக் கொள்கையையும் ஆதரிக்க நாங்கள் விரும்பவில்லை. எங்களது தேசிய நலன்களுக்கு எது மிகவும் பொருத்தமானதோ, அதையே செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
வரவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு மற்றும் இந்தியா-ரஷ்யா தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் விளாடிமிர் புதின் இடையே வெள்ளிக்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது.
இதில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம். மேலும், முக்கியமான உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பாக இரு தலைவர்களும் தங்களது நிலைப்பாடுகளை பரிமாறிக் கொள்வார்கள். செயற்கை நுண்ணறிவு (AI) ஒத்துழைப்பும் இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து ரஷ்யா மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும் பெஸ்கோவ் கூறினார். பிரிக்ஸ் அமைப்பில் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகியவை ரஷ்யாவின் முக்கியமான திட்டங்களாக உள்ளன என்றார்.
பிரிக்ஸ் அமைப்பின் சிந்தனையில் பல்முனை உலகம் என்ற கருத்து முக்கிய இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். அமெரிக்காவை நேரடியாகக் குறிப்பிடாமல், சில சக்திகள் மீண்டும் ஒருமுனை உலகை உருவாக்க முயற்சித்து வருவதாகவும், அதற்காக ஆபத்தான வழிமுறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். அதேவேளையில், உலகின் பெரும்பான்மையான நாடுகள் பல்முனை உலகிற்கு ஆதரவாக உள்ளதாகவும், இந்த திசையில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் பங்கை பெஸ்கோவ் பாராட்டினார். அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிகளும் முக்கியமானவை என்று குறிப்பிட்டார். உக்ரைன் மோதலை ரஷ்யா தொடங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
2014ஆம் ஆண்டில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும், அதன் காரணமாக தேசியவாத சக்திகள் ரஷ்ய மக்களை ஒடுக்கத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா விரும்புகிறது என்றும், அதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதாகவும் கூறினார். ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என நம்புவதாகவும் பெஸ்கோவ் தெரிவித்தார்.
மேலும், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதற்கு அமெரிக்கா விதித்து வரும் தடைகள் சட்டவிரோதமானவை என்றும், அவை சர்வதேச வர்த்தக விதிகளுக்கு எதிரானவை என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA