Enter your Email Address to subscribe to our newsletters

கீவ், 08 செப்டம்பர் (ஹி.ச.)
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று அதிகாலை திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தி தனது ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சமாதான பேச்சுவார்த்தை குழுவினர் உக்ரைன் தலைநகரில் இருந்து வெளியேறிய சில மணி நேரங்களிலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ வெளியிட்ட தகவலின்படி, ரஷ்ய படைகள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் விழுந்து வெடித்தன.
இதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். பல இடங்களில் தீப்பிடித்து எரிந்ததால், தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தாக்குதலை தொடர்ந்து நகரம் முழுவதும் வான் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
ஏவுகணை தாக்குதலின் போது சிதறிய பாகங்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றும், மூன்று மாடி கட்டிடம் ஒன்றும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக கீவ் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான நிலத்தடி முகாம்களுக்கு செல்லுமாறு நிர்வாகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த பதற்றமான சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வரும் அண்டை நாடான போலந்து, தனது வான் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணுவ விமானங்களை கொண்டு ரோந்து நடவடிக்கையை தொடங்கியுள்ளது. உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள இந்த தாக்குதல், ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, நீண்ட காலமாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க சிறப்பு தூதர்கள் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமாதான முயற்சிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் வேளையில், மறுபுறம் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருப்பது, பேச்சுவார்த்தைக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b