Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
TCS நிறுவனத்தின் தரவு மைய முதலீட்டை தமிழகம் ஏன் இழந்தது என தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
மிகப்பெரிய முதலீட்டு முடிவுகள் மூன்று மாதங்களில் எடுக்கப்படுவதில்லை என்றும், நீண்ட காலத்திற்கு முன்பே பேச்சுவார்த்தைகள் தொடங்கி, பல்வேறு கட்ட ஆலோசனைகள் மற்றும் முடிவுகளுக்குப் பிறகே முதலீட்டு முடிவுகள் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னிடம் கேள்விகள் எழுப்பப்படுவதாகக் கூறிய ஸ்ரீதர் வேம்பு, திமுகவின் சில அணுகுமுறைகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தமிழகம் மிகச்சிறந்த மாநிலம் என்றும், திமுக தமிழகத்தின் ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் Zoho நிறுவனத்திற்கும் தனக்கும் மிகுந்த ஆதரவு அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வடஇந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்ட சொற்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த விமர்சனங்கள், சனாதன தர்மம் தொடர்பாக திமுக தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் உள்ளிட்டவை இந்தியாவின் பிற பகுதிகளிலும் கவனிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீட், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், இந்தி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதன் மூலம் தமிழகம் தனித்துவமானது என்ற பிம்பத்தை திமுக உருவாக்கியுள்ளதாகவும் ஸ்ரீதர் வேம்பு விமர்சித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் தமிழகத்தைவிட நடைமுறை சார்ந்த அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் முதலீடுகளை ஈர்ப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் பாஜகவை எதிர்த்தாலும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக ஸ்ரீதர் வேம்பு பாராட்டியுள்ளார்.
வடஇந்தியர்களுக்கு எதிரான மறைமுகப் பிரிவினைவாத அணுகுமுறையை விஜய் கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், அவர் வடஇந்தியாவிலும் பிரபலமாக இருப்பது ஒரு தமிழனாக தனக்கு பெருமை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நலனே உண்மையான நோக்கம் என்றால், திமுக வடஇந்தியாவை நோக்கிய வெறுப்பைக் கைவிட்டு நடைமுறை சார்ந்த அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பாஜகவை எதிர்க்கலாம்; ஆனால் அதற்காக சனாதன தர்மம், இந்தி, வடக்கன்கள் உள்ளிட்ட விவகாரங்களில் வெறுப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ