முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஸ்போர்ட் திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு
விருதுநகர், 08 செப்டம்பர் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி அ.தி.மு.க. நிர்வாகி விஜய நல்லதம்பி, ரூ.30 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக 2021ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீச
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஸ்போர்ட் திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு


விருதுநகர், 08 செப்டம்பர் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி அ.தி.மு.க. நிர்வாகி விஜய நல்லதம்பி, ரூ.30 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக 2021ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் செய்தார்.

இதன் பேரில் விஜயநல்லதம்பி, ராஜேந்திர பாலாஜி, அவரது நண்பர்கள் முத்துப்பாண்டி, மாரியப்பன், பாண்டியராஜன், ரவி கணேசன், ராமகிருஷ்ணன், நாகேஷா ஆகிய 8 பேர் மீது ஒரு வழக்கும், விஜயநல்லதம்பி அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி உட்பட அவரது நண்பர்கள் 7 பேர் மீதும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2021ல் 2 வழக்குகளை பதிவு செய்தனர்.

இதில் 2022 ஜன.5ல் கர்நாடக மாநிலம் ஹாசனில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.

2023 ஜனவரியில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

ஆனால் ராஜேந்திர பாலாஜி மீதான புகாரை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அப்போதைய நீதிபதி வள்ளி மணவாளன் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இதனையடுத்து கவர்னர் அனுமதி வழங்கிய நிலையில் 2025 ஏப். 15ல் 2 கூடுதல் குற்றப்பத்திரிகைகளை, குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது விசாரணை நடக்கிறது.

இந்த வழக்குகளின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின் ஒரு பகுதியாக ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தனது பாஸ்போர்ட்டை திரும்ப வழங்கக் கோரி ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பாஸ்போர்ட்டை திருப்பி வழங்கி உத்தரவிட்டார்.

இருப்பினும், வெளிநாடு செல்ல வேண்டுமானால் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெற்ற பிறகே செல்ல வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையையும் நீதிபதி விதித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b