இந்தியாவுக்கு எதிரான வரலாற்று டி20- ஜப்பான் அணி அறிவிப்பு கேப்டனாக கெண்டல் கடோவாக்கி-பிளெமிங் நியமனம்
டோக்கியோ , 08 செப்டம்பர் (ஹி.ச.) உலக டி20 சாம்பியனான இந்திய அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான ஜப்பான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - ஜப்பான் அணிகள் மோதும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டி வருகிற 22-ந
A


டோக்கியோ , 08 செப்டம்பர் (ஹி.ச.)

உலக டி20 சாம்பியனான இந்திய அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான ஜப்பான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஜப்பான் அணிகள் மோதும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டி வருகிற 22-ந்தேதி ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - ஜப்பான் அணிகள் முதல் முறையாக நேருக்கு நேர் மோதுவதால், இந்த போட்டி இரு நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த போட்டிக்கான ஜப்பான் அணியின் கேப்டனாக கெண்டல் கடோவாக்கி-பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பான் அணிக்காக அதிக டி20 சர்வதேச ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர், அணியை வழிநடத்த உள்ளார்.

மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுயோஷி தகாடா மீண்டும் ஜப்பான் அணிக்கு திரும்பியுள்ளார். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர் ஜேக் குசுதா-நாயர்னுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மகோட்டோ தனியாமாவும் அணியில் இடம்பெற்றுள்ளார். ஜப்பான் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் தன்வசம் வைத்துள்ளார்.

ஜப்பான் அணி வருமாறு:-

கெண்டல் கடோவாக்கி-பிளெமிங் (கேப்டன்), சார்லி ஹாரா-ஹின்சே, பெஞ்சமின் இடோ-டேவிஸ், அலெஸ்டர் கடோவாக்கி-பிளெமிங், கோஹி குபோடா, ஜேக் குசுதா-நாயர்ன், வட்டாரு மியாவூச்சி (விக்கெட் கீப்பர்), ரெயோ சகுரானோ-தாமஸ், அலெக்ஸ் ஷிராய்-பாட்மோர் (விக்கெட் கீப்பர்), ஷோமா சுகாயா-ஸ்லேட்டர், டெக்லான் சுசுகி-மெக்கோம்பு, சுயோஷி தகாடா, இப்ராஹிம் தகாஹாஷி, மகோட்டோ தனியாமா, லக்லான் யமமோட்டோ-லேக்.

இந்தியா - ஜப்பான் அணிகள் மோதும் இந்த போட்டி, இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தொடங்கப்படும் ‘ஸ்போர்ட் 75’ முயற்சியின் முதல் நிகழ்வாகவும் அமைகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு இந்த ஆட்டம் முக்கியமான பயிற்சி போட்டியாக இருக்கும்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA