தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர அரசியல் நகர்வு - கூட்டணிக் கட்சிகளுடன் நாளை முக்கிய ஆலோசனை
சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.) தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தனது ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் கட்சிகளுடன் நாளை முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான சி. ஜோ
தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர அரசியல் நகர்வு -  கூட்டணிக் கட்சிகளுடன் நாளை முக்கிய ஆலோசனை


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தனது ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் கட்சிகளுடன் நாளை முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் தலைமையில் கட்சியின் பனையூர் தலைமையகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரண்டு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலாவதாக, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி பலத்துடன் களமிறங்குவது, தொகுதிப் பங்கீடு மற்றும் பிரச்சார உத்திகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவதாக, தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய கூட்டணிக்கு பெயர் சூட்டுவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

புதிய கூட்டணிக்கு பொருத்தமான பெயரைத் தேர்வு செய்வது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, ஒருமித்த முடிவு எட்டப்படும் எனக் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த திடீர் ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b