த.வெ.க பிரமுகர் கொலை வழக்கு - 5 பேருக்கு செப்டம்பர் 21 வரை நீதிமன்றக் காவல்
சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை பெசன்ட் நகர் சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் முன்பு அதிமுகவில் 174-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளராக இருந்தவர். சுமார் இரண்டு மாதங்களுக்
தவெக பிரமுகர் வெட்டிக்கொலை வழக்கு - 5 பேருக்கு செப்டம்பர் 21 வரை நீதிமன்றக் காவல்


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை பெசன்ட் நகர் சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்

(வயது 45).

இவர் முன்பு அதிமுகவில் 174-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளராக இருந்தவர். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்றி வந்தார்.

ஐடி நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த இவர், ஜே-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 5-ம் தேதி இரவு வண்ணாந்துறை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த கண்ணனை, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியுள்ளது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20), கோவிந்தராஜபுரத்தைச் சேர்ந்த ராகேஷ் (20), திருவான்மியூர் பெரியார் நகரைச் சேர்ந்த நரேஷ் (20), இந்திரா நகரைச் சேர்ந்த ஹரிஹரன் (20) மற்றும் கோட்டூரைச் சேர்ந்த மணிகண்டன் (20) ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் பழிக்குப்பழி காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பரணியின் பெரியப்பா சிவா என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த பழைய முன்விரோதம் காரணமாகவே 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியாவில் பந்தா காட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐந்து பேரையும் வருகிற செப்டம்பர் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / vidya.b