தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு
சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.) ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிற இந்த கூட்டத்தொடரில் முதலில் 2026-27-ம்
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிற இந்த கூட்டத்தொடரில் முதலில் 2026-27-ம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் அதற்கான பதிலுரை நடைபெற்றதை தொடர்ந்து, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக இன்று கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் இடம்பெறுகின்றன.

இந்த கூட்டத்தொடர் முழுவதும் பல்வேறு முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. கடந்த வாரங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு, தொழில்துறை, இயற்கை வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைகள் உள்ளிட்ட பல துறைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன.

இந்த விவாதங்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக பங்கேற்று தங்கள் தொகுதி சார்ந்த கோரிக்கைகளையும், மாநில நலன் சார்ந்த கருத்துக்களையும் முன்வைத்தனர்.

இந்நிலையில் கடைசி நாளான இன்று மட்டும் எட்டு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் ஒரே நாளில் எடுத்துக் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்றைய விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்த பின்னர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பதிலுரை வழங்க உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அனைத்து மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரின் உரையுடன் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மாலையுடன் இனிதே நிறைவடைய உள்ளது.

Hindusthan Samachar / vidya.b