மிசா வரலாறு நாடறியும், வரலாறு ஒருபோதும் மறக்காது - தமிழச்சி தங்கபாண்டியன்
சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.) சட்டப்பேரவையில் மிசா குறித்து ஆவேசமாக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தளத்தில், சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், சட்டம்–ஒழுங்கு, குழந்தைகள
Tamizhachi Thangapandian


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

சட்டப்பேரவையில் மிசா குறித்து ஆவேசமாக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தளத்தில்,

சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், சட்டம்–ஒழுங்கு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்து, எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு ஆதாரத்தோடு பதிலளித்து, காவல்துறை நிர்வாகம் - காவல்துறையினருக்கு ஆற்றப்போகும் புதிய திட்டங்களை எடுத்துரைத்து, மக்கள் பணியாற்றிட வேண்டிய இடத்தில், மாண்புமிகு முதலமைச்சர் விஜய், வெற்று அரசியல் மேடை போல் பேசியிருப்பது வருந்தத்தக்கது.

ஜனநாயகத்தை காப்பாற்ற MISA-வில் ஆயிரக்க்கணக்கான திமுக - தோழமை இயக்கத்தினர் கைது செய்யப்பட்டபோது, அவர்கள் எங்கே இருக்கின்றார்கள், எப்படி இருக்கின்றார்கள், உயிரோடுதான் இருக்கின்றார்களா? என்பது கூட தெரியாமல், பதைபதைப்போடும் தவிப்போடும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், நாள் கணக்கில் குடும்பம் குடும்பமாக காத்துக் கிடந்த வரலாறு , நாடறியும். ஜனநாயகத்திற்காக சிறை சென்று அடக்குமுறையை, அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்ட வரலாறு அது.

மரியாதைக்குரிய தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெற்றிருப்பது வெறும் தழும்பல்ல; ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில், அவர் ஏற்றுக்கொண்ட வலியின் வீர அடையாளம் ; '... தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே !' என்ற புறநானூற்றுத் தாயின் வீரவரிகளுக்கு, வாழும் இலக்கணமான வரலாறு. அந்த வீரவரலாற்றைக் கேலி செய்வது, ஜனநாயகம் காக்கப் போராடிய ஒரு தலைமுறையின் தியாகத்தையே கேலி செய்வதாகும்.

MISA வரலாறு நாடறியும்…

வரலாறு ஒருபோதும் மறக்காது; மறுக்காது; மறைக்காது என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN