Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரம், வணிகவியல் மற்றும் கணக்கியல் பாடங்களைக் கற்பிக்கத் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
மேலும், வணிகவியல் பாடப்பிரிவை தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொடர்ந்து நடத்தவும், அப்பாடப்பிரிவில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் வேறு பள்ளிக்கு மாற்றுமாறு வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி மதுரை மாகாளிப்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிபாரதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில், ஆசிரியர் பணியிடங்கள் தற்போதுவரை காலியாகவே உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், கூடுதல் பணியாக வேறு பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளியில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியுமா? என கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுபோன்ற ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு தேவையான கணினி, இணையதளம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தனி நிதி ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடம் உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P