கே.சி.ஆரை கொல்ல சதி -பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கே.டி.ஆர். பரபரப்பு குற்றச்சாட்டு
ஐதராபாத் , 08 செப்டம்பர் (ஹி.ச.) முன்னாள் தெலங்கானா முதல்-மந்திரி கே. சந்திரசேகர் ராவை கொலை செய்ய காங்கிரஸ் கட்சியினர் சதி செய்ததாக பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் (கே.டி.ஆர்.) பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கே.சி.ஆரின
A


ஐதராபாத் , 08 செப்டம்பர் (ஹி.ச.)

முன்னாள் தெலங்கானா முதல்-மந்திரி கே. சந்திரசேகர் ராவை கொலை செய்ய காங்கிரஸ் கட்சியினர் சதி செய்ததாக பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் (கே.டி.ஆர்.) பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

கே.சி.ஆரின் எர்ரவல்லி பண்ணை வீட்டை முற்றுகையிடும் போராட்டம் என்ற பெயரில் காங்கிரஸ் தொண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

பண்ணை வீட்டுக்கு செல்ல முயன்ற கே.டி.ஆர். உள்ளிட்ட பி.ஆர்.எஸ். தலைவர்களை போலீசார் கைது செய்து போயின்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.டி.ஆர்.

கே.சி.ஆரின் வீட்டு வளாகம் வரை காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் எப்படி அனுமதித்தனர் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தங்களது சொந்த வீட்டுக்கு செல்லும்போது பி.ஆர்.எஸ். தலைவர்களை போலீசார் ஏன் தடுக்கிறார்கள் என்பதற்கு போலீஸ் டி.ஜி.பி. பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காங்கிரஸ் தொண்டர்களின் தாக்குதல்களை போலீசார் கண்டுகொள்ளாமல், பி.ஆர்.எஸ். தலைவர்களை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தெலங்கானா அரசு காலம் கடத்தி வருவதாகவும் கே.டி.ஆர். விமர்சித்தார்.

அரசின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே இதுபோன்ற ‘டைவெர்ஷன்’ அரசியல் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

“டைவெர்ஷன், டிஸ்ட்ரக்ஷன், டிஸ்ட்ராக்ஷன் ஆகியவற்றைத் தவிர முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு வேறு எந்த அரசியலும் தெரியாது” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

சட்டசபை கூட்டத்தொடர் நேரத்தை மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்று கே.டி.ஆர். வலியுறுத்தினார். கே.சி.ஆர். மற்றும் பி.ஆர்.எஸ். தலைவர்களை விமர்சிப்பதற்காக சட்டசபையை பயன்படுத்துவது சரியல்ல என்றும், அதற்காக ஒரு நாளை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள நாட்களில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தலித் மக்களிடம் அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால், தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கே.டி.ஆர். கோரிக்கை விடுத்தார்.

தலித் பந்து திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் ரூ.12 லட்சம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இதுவரை குறைந்தபட்சம் ரூ.12 பைசா கூட வழங்கவில்லை என்று அவர் விமர்சித்தார்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி முடிவை எடுப்பவர்கள் என்றும், சரியான நேரம் வரும்போது இந்த அரசுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்றும் கே.டி.ஆர். தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA