Enter your Email Address to subscribe to our newsletters

கஜ்வேல் , 08 செப்டம்பர் (ஹி.ச.)
தெலங்கானா சட்டப்பேரவை சபாநாயகர் கடம் பிரசாத் குறித்து பிஆர்எஸ் கட்சி எம்எல்சி தாதா மது தெரிவித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு சார்பில், கஜ்வேல் தொகுதியில் உள்ள எர்ரவெல்லி கிராமத்தில் அமைந்துள்ள பிஆர்எஸ் தலைவர் கேசிஆரின் பண்ணை வீட்டை முற்றுகையிடும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து எர்ரவெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பண்ணை வீட்டை நோக்கிச் செல்லும் அனைத்து முக்கிய சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மார்குக் காவல் நிலையம் அருகிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கும், தேவைப்பட்டால் கைது செய்து அழைத்துச் செல்வதற்கும் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, எர்ரவெல்லி கிராமத்தில் பிஆர்எஸ் கட்சியினர் அமைத்திருந்த போராட்ட முகாமை போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றம் ஏற்பட்டது.
காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சியினருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக எர்ரவெல்லி பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இருதரப்பினரும் மோதலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி, முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA