Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 08 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பதி மலையில் இம்மாதம் 15ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 12ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவமும் தொடங்க உள்ளன. இரண்டு பிரம்மோற்சவங்களும் தலா 9 நாட்கள் நடைபெற உள்ளன.
வருடாந்திர பிரம்மோற்சவ கொடியேற்றம், உகாதி, வைகுண்ட ஏகாதசி, ஆணிவார ஆஸ்தானம் உள்ளிட்ட முக்கிய திருநாட்களுக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமைகளில், ஏழுமலையான் கோயிலை முழுமையாக சுத்தம் செய்து நறுமண கலவை பூசும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதற்கு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று பெயர்.
அதன்படி, வரும் 15ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையான இன்று அதிகாலை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் தொடங்கியது.
காலை தொடங்கி சுமார் 10 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று கோயிலின் உட்புறம் மற்றும் பல்வேறு பகுதிகளை முழுமையாக கழுவி சுத்தம் செய்தனர்.
பின்னர் சந்தனம், ஜவ்வாது, குங்குமம், நாமக்கட்டி உள்ளிட்ட திரவியங்கள் கலந்து தயாரிக்கப்பட்ட நறுமண கலவை கோயிலின் சுவர்களில் பூசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேவஸ்தான பெரிய ஜீயர் புதிய பட்டு வஸ்திரத்தை தலைமேல் சுமந்து, கொடிமரம் மற்றும் கருவறையை வலம் வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார்.
திருமஞ்சனப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காலை 11 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P