Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நள்ளிரவில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது.
நள்ளிரவு நேரத்தில் திடீரென மின் கம்பி அறுந்து விழுந்ததை அடுத்து, அந்த வழித்தடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்பட்டு வந்த புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. நள்ளிரவு என்பதால் பணி முடிந்து வீடு திரும்பிய பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தகவல் அறிந்ததும் ரயில்வே நிர்வாகம் உடனடியாக சீரமைப்பு பணியில் இறங்கியது. திருவொற்றியூர், பொன்னேரி மற்றும் பேசின் பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் இருந்து மின்சார பிரிவு ஊழியர்கள் விரைந்து வந்தனர். அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை அகற்றிவிட்டு, புதிய மின் இணைப்பை சரி செய்யும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மின் கம்பி சீரமைக்கப்பட்டு, மீண்டும் ரயில் சேவை வழக்கம் போல் தொடங்கியது.
Hindusthan Samachar / vidya.b