கொட்டும் மழையில் நனைந்தபடி பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.) பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் புத்தகங்களை பைண்டிங் செய்யும் பணியை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்காததைக் கண்டித்து சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் ஆனந்த் இல
கொட்டும் மழையில் நனைந்தபடி பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் புத்தகங்களை பைண்டிங் செய்யும் பணியை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்காததைக் கண்டித்து சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் ஆனந்த் இல்லம் முன்பு நேற்று இரவு பரபரப்பான போராட்டம் நடைபெற்றது.

இதனால் பசுமைவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இப்போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவு நேரத்தில் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தங்களது வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வந்த இந்த பைண்டிங் பணி இந்த ஆண்டு மறுக்கப்பட்டதாகவும், இதனால் தங்கள் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் நேரில் வந்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b